HTN-NEWS.COM ...Da Tamil E-Magazine      Contact.....11-11-2007                 Home

 

 

 

 

 

 

 

 

 

 

குருபெயர்ச்சி ராசிபலன் (11.11.2007)

(குருபகவான் 16-11-07, காலை 4.34 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இதனால் ஏற்படும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளன. )

விருச்சிகம்




விசாகம் 4, அனுஷம், கேட்டை

முயற்சியால் எதையும் சாதிக்கும் விருச்சிகராசி அன்பர்களே!

உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களை பார்க்கிறார். சனி பெயர்ச்சியால் தொழில்நிலையில் இருந்த அனுகூல குறைவை மாற்றி, வளர்ச்சி தரும் வகையில் நற்பலன் வழங்கி குருபகவான் துணைநிற்பார். எந்த விஷயம் குறித்தும் ஆர்வத்துடனும், இனிமையாகவும் பேசி நற்பெயர் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்க நல்ல சூழ்நிலை உருவாகும். சமூகப்பணியில் ஆர்வமுடன் செயல்பட்டு உயரிய அந்தஸ்து பெறுவீர்கள். இளைய சகோதரர்கள் உங்களின் எண்ணங்களை செயல்வடிவமாக மாற்றி வெற்றி பெற்றுத் தருவார்கள்.

வீடு, மனையில் அபிவிருத்தி பணியில் நஷ்டப்பட வாய்ப்புண்டு. திட்டமிட்டு கவனத்துடன் செயல்பட்டால் இதில் இருந்து தப்பலாம். தாயின் உடல்நிலையில் சிறு பாதிப்பு ஏற்படலாம். புத்திரர்கள் படிப்பிலும், பொது நடவடிக்கையிலும் நல்லவிதமாக செயல்பட்டு வளர்ச்சி அடைவர். பூர்வ சொத்தில் கூடுதல் வருமானம், கடன் வரவு ஆகியவற்றால் பணம் பெருகும். குலதெய்வ வழிபாடை முறையாக நிறைவேற்றுவதால் பலவிதத்திலும் குடும்பவளர்ச்சி அதிகரிக்கும். எதிரிகள் உங்களின் வளர்ச்சிகண்டு கெடுசெயலை குறைத்துக்கொள்வர். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும்.

உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சீராக இருக்க, ஒருவருக்கொருவர் மனம்விட்டு கருத்து பரிமாற்றம் செய்துகொள்வது நலம். நண்பர்களுடன் பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் தகுதிக்கு மீறிய செயல்பாடு கூடாது. வாழ்க்கை வசதி அதிகரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும். தந்தைவழி உறவினர்களுடன் பழைய விவகாரங்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் நடந்து நன்மை ஏற்படும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு சுபமங்கல நிகழ்வு ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் சனியின் அமர்வு தொந்தரவு தருவதாக இருந்தது. தற்போது குருவின் பார்வையால் அது சற்று தணிந்து, வளர்ச்சி பெற நல்வாய்ப்பும், அனுகூலமும் அதிகம் ஏற்படும். ஆதாய பணவரவில் தர்மம் செய்வீர்கள். மூத்த சகோதரருக்கு இயன்ற உதவி புரிவீர்கள். வெளியூர், வெளிநாடு வேலைவாய்ப்பு விரும்புபவர்களுக்கு அனுகூல பலன் ஏற்படும்.


தொழிலதிபர்கள்: பெட்ரோல், பிரின்டிங், பட்டாசு, தீப்பெட்டி, ஜெனரேட்டர், சோலார் அடுப்புகள், விளக்கு உற்பத்தி செய்பவர், கொதிகலன் ஆலை, மர அறுவை மில், வாகனம், மருத்துவ உபகரணங்கள், கிரீம் வகைகள், பாத்திரம், மெழுகுவர்த்தி, கம்பளி ஆடைகள் உற்பத்தி செய்வோர், ஆஸ்பத்திரி நடத்துவோர் புதிய யுக்திகளைக் கையாண்டு தொழில் வளம் பெறுவர். பணவரவு எதிர்பார்த்த அளவு திருப்திகரமாக கிடைக்கும். சமூகத்தில் உயரிய அந்தஸ்து கிடைக்கும். கட்டட விஸ்தரிப்பு பணிகளில் கூடுதல் கவனம் அவசியம். மனைவி விரும்பிய பொருள் வாங்கித்தருவதால் குடும்ப ஒற்றுமை பலம்பெறும்.

வியாபாரிகள்: வாகன உதிரிபாகங்கள், மின்சாதனங்கள், வீட்டு உபயோக சாதனங்கள், பாத்திரம், கோதுமை, ரெடிமேட் ஆடை, தோல், கம்பளி ஆடை, சமையல் எண்ணெய், மருந்துப்பொருட்கள், கவரிங் நகைகள், பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர் வகை, பூ, காய், பழங்கள் விற்பனை செய்பவர்கள் கூடுதல் லாபம் அடைவர். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் இருக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். போட்டி விலகும். இளம் வியாபாரிகளுக்கு திருமண முயற்சி இனிதாக கைகூடும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் எதிர்வரும் குறுக்கீடுகளை சமயோசிதத்துடன் சமாளித்து வெற்றி பெறுவர். சக பணியாளர்களுடன் தேவையற்ற விவாதம் கூடாது. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கொதிகலன் இயக்குதல், பட்டாசு தயாரிப்பு, உணவுப் பொருள் உற்பத்தி, லேப் டெக்னீஷியன், தீயணைப்புத் துறையில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வும், கூடுதல் வசதியும் கிடைக்கப் பெறுவர். வீட்டுக்கடன் அவசரப்பட்டு வாங்க வேண்டாம். வாங்கினாலும் மிகத் தெளிவான திட்டம் தேவை. எதிரியும் மதிக்கும் நன்னிலை பெறுவீர்கள். அலைச்சல் குறையும்.

மாணவர்கள்: மருத்துவம், விவசாயம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெக்ஸ் டைல், பிரிண்டிங் டெக்னாலஜி, ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், தொழிற்பயிற்சி, விளையாட்டுத்துறை, லைப்ரரி சயின்ஸ், போட்டோகிராபி, சினிமா டெக்னாலஜி பயிற்சி பெறும் மாணவர்களின் படிப்பு பின்தங்கும். கூடுதல் கவனத்துடன் படிப்பதால் மட்டுமே பலன் பெறமுடியும். மற்ற துறைகளில் உள்ளவர்கள் ஓரளவு படிப்பர். படிப்புக்கான பணவசதி சிரமமின்றி கிடைக்கும். சக மாணவர்களுடன் விவாதம் செய்தால் சிக்கலில் மாட்ட நேரும். பெற்றோர் விருப்பம் அறிந்து செயல்படுவது நல்லது.

பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு நன்னிலை பெறுவர். சக பணியாளர்களுடன் குடும்ப விவகாரம் குறித்த பேச்சு தவிர்க்கவும். குடும்பத்தை கவனிக்கும் பெண்கள் கணவரின் வேலைத் தன்மை, பணவரவு போன்றவற்றை கவனத்தில் கொண்டு பேசுவதும், செலவழிப்பதும் நல்லது. புத்திரர் களின் செயல்களை ஊக்கப் படுத்தி நல்வழியில் திருப்புவீர்கள். தாய்வீட்டில் இருந்து வருமானம் கிடைக்கும். சுய, கூட்டுத்தொழில் புரிபவர்கள் கூடுதல் வளர்ச்சி வாய்ப்பும், பணவரவும் பெறுவர். திருமண முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலத்தில் இருந்த தடைகள் விலகி அரசியல் பணிகளில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். எவரும் உற்றுநோக்கும் இனிய சூழ்நிலை உருவாகும். ஆதரவாளர்கள் எண்ணிக்கை வளர்ச்சி பெறும். புத்திரர்கள் தமது தகுதி, திறமையை வளர்த்து உங்களுக்கும் உறுதுணையாக உதவுவர். எதிரிகள் விலகிச் செல்வர்.

மனைவி வழி உறவினர்கள் எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வர். அரசியலுடன், தொழில் நடத்துபவர்கள் வளர்ச்சியும், அதிக வருமானமும் பெறுவர். புதிய பதவிபொறுப்பு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.

விவசாயிகள்: மண்வளத்திற்கேற்ற பயிர் செய்தால் மட்டுமே தகுந்த மகசூல் இருக்கும். நிலம் தொடர்பான பிரச்னைகள் விலகி அனுகூல பலன் பெறுவீர்கள். கால்நடை பராமரிப்பில் தகுந்த கவனம் வேண்டும்.











 

 
 

                                              [C] Copyright www.Htn-news.com 2004-2007         Contact

::Welcome to Globe7