|
|
|

HTN health news
இஞ்சியின் மருத்துவ குணங்கள்!
இஞ்சிக்கு மிஞ்சிய மருந்துமில்லை;
சுப்பிரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை
.............. பழமொழி.
இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதங்களில் ஒன்று இஞ்சி என்று
கூறலாம். அந்த அளவிற்கு மருத்துவ குணங்கள் அதில் அடங்கியிருக்கின்றன.
பள்ளிக்கூடம் படிக்கும் சிறு வயதில் இஞ்சி தொண்டையை எரியச் செய்யும் என்ற அச்சத்தினால்
நாம் இஞ்சிக்காபி அல்லது இஞ்சிச்சாறு அடங்கிய பாலைக் குடிப்பதற்குப் பயந்து
ஓடினாலும், நம்மைப் பிடித்து வைத்து நம் வீட்டு பாட்டிமார்கள் வாயில் புகட்டுவதை
உணர்ந்திருக்காதவர்கள் இருக்க முடியாது.
அப்போது அது நமக்கு கசப்பாக இருந்தாலும், இஞ்சியின் மகத்துவம் ஒரு குறிப்பிட்ட
வயதில் நமக்கு தெரிய வரும் போது தான் பாட்டிமார்களுக்கு நம் உடல் ஆரோக்கியத்தில்
இருந்த அக்கறையின் காரணமாகவே வலுக்கட்டாயமாக புகட்டினார்கள் என்று உணர முடியும்.
மஞ்சளுக்கு அடுத்தபடியாக மருத்துவ குணம் கொண்டது இஞ்சி.
மஞ்சளும், இஞ்சியும் தோற்றத்தில் ஒரே மாதியாகத் தான் தெரியும்.
இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகிய மூன்றும் சமையலில் இடம்பெறவேண்டியது மிகமிக
அவசியம்.
இஞ்சிக்கு எரிப்புக் கொண்டாட்டம். எலுமிச்சம் பழத்திற்கு புளிப்புக் கொண்டாட்டம் என்பது
காவடி சிந்துப் பாடல்.
நாம் உண்ணும் கடினமான பண்டங்களையும், பதார்த்தங்களையும் எளிதில் செரிக்கத் தூண்டக்கூடியது
இஞ்சி. இதன் மூலம் பசியைத் தரும். உஷ்ணத்தை உண்டாக்கும் குணம் கொண்டது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பழங்காலத்தில் இருந்தே இஞ்சியை சமையலில் சேர்த்துக் கொள்ளும்
வழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் பித்தம், பித்த வாய்வு, பித்தம் சம்பந்தப்பட்ட
நோய்கள் வராமல் தடுப்பதுடன் உணவுகளை எளிதில் ஜீரணிக்கச் செய்து விடும் குணமுடையது
இஞ்சி.
வாந்தி, குமட்டல், பித்த மயக்கம் ஏற்படும் போது இஞ்சி, வெள்ளை வெங்காயம் இரண்டையும்
தேனில் கலந்து குறிப்பிட்ட அளவிற்கு சாப்பிட்டு வந்தால் வாந்தி, மயக்கம் போயே போய்விடும்.
வெள்ளை வெங்காயத்திற்குப் பதில் மாதுளம் பழரசம் சேர்த்து கொடுத்து வந்தால் இருமல்,
இரைப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
இஞ்சியை சுத்தம் செய்து மேல்தோலை நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி 150 கிராம்
எடுத்து, அத்துடன் சுத்தமான தேனையும் அதே அளவிற்கு சேர்த்து நான்கு நாள் கழித்து
தினமும் ஒன்றிரண்டு துண்டுகளாக ஒரு மண்டலத்திற்கு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம்
அடைந்து, பித்தம் முழுவதுமாக நீக்கப்பட்டு விடும். ஆயுள் அதிகரிப்பதுடன் முகப்பொலிவும்,
அழகும் கூடும். வேம்பு காயகல்பம் போன்று இதுவும் ஒரு காயகல்ப முறையே.
சித்த மருத்துவர்களிடம் நாம் சென்றோமானால் முதலில் அவர்கள் நமக்குத் தருவது இஞ்சி
ரசம் அடங்கிய மாத்திரை, கஸ்தூரி மாத்திரை, சஞ்சீவி மாத்திரை மற்றும் செந்தூரம்
ஆகியவையே. நோயின் திடமறிந்து அனுமானமாக இதனை முதலில் அளித்து விடுவார்கள். பிணிகளும்
உடலை விட்டு வெகுவேகமாகப் பறந்தோடி விடும்.
இஞ்சியே இல்லை என்று வைத்துக் கொண்டோமானால் நமக்கு சாப்பாடு இருக்காது. பசிக்காது.
பிரபல சமையல் நிபுணர்களுக்குத் தான் தெரியும் இஞ்சியின் மர்மம்.
இஞ்சியை அலோபதி மருத்துவர்கள் கூட பரிந்துரைக்கும் நிலை உருவாகியுள்ளது. இஞ்சியை
ரசாயன முறைப்படி சாறு பிழிந்து ஜிஞ்சர் பெரீஸ் என்ற பெயரில் மருந்து தயாரித்து அதனை
செரிப்புண்டாக அளித்து வந்தார்கள். மதுவிலக்கு அமலுக்கு வந்த பின்னர் இந்த ஜிஞ்சர்
பெரீஸிற்கு தட்டுப்பாடாகி விட்டது.
இஞ்சி மட்டுமல்ல. அது காய்ந்து சுக்காக மாறினாலும் பல்வேறு நோய்களைத் தீர்க்கும்
அருமருந்தாகச் செயலாற்றுகிறது. பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசம்
ஏதுமின்றி இஞ்சி மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் அனைவருக்கும் பயன்படுகின்றன.
|
|
|