|
ஒசாமாவைப் பிடிப்பது லட்சியம்:
ஒபாமா சவால்
வாஷிங்டன்: "அமெரிக்கா அதிபராக, நான்
பதவியேற்றதும், எனது முதன்மைப் பணி, சர்வதேச பயங்கரவாதியான
ஒசாமா பின் லேடனைப் பிடிப்பது அல்லது கொல்வதுதான் 'என்று
பாரக் ஒபாமா தெரிவித்தார்.
அமெரிக்க
அதிபராக பராக் ஒபாமா அடுத்தாண்டு ஜனவரி மாதம் பதவியேற்கிறார்.
வெற்றி பெற்ற பிறகு ஒபாமா "டிவி' ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அதில் அவர் கூறியதாவது: அமெரிக்காவில் அடுத்து அமையவிருக்கும்
புதிய அரசின் முதன்மையான பணி அல்-குவைதா இயக்கத்தை அடியோடு
ஒழிப்பதுதான். இந்த இயக்கத்தின் தலைவராக இருந்து செயல்படும்
ஒசாமாவை மட்டும் குறி வைக்கவில்லை. அமெரிக்க நிலைகளின்
மீது குறிவைத்து தாக்குதல் நடத்துவதில் தலைவனாக செயல்படுவது
ஒசாமா என்பது வெளிப்படை . எனவே, ஒசாமாவை கூண்டோடு பிடிப்பது
அல்லது கொல்வது தான் எமது அரசின் முக்கிய பணியாக இருக்கும்.
இதற்காக, ஈராக்கில் இருக்கும் அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தான்
அனுப்ப திட்டமிட்டுள்ளேன். எனது தேர்தல் பிரசாரத்தின்போது,
அளித்த உறுதிமொழிப்படி ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை
திரும்ப அழைப்பேன். இது உடனடியாக நடக்கும். இது தொடர்பாக,
படை தளபதிகளையும், எனது தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் கலந்து
ஆலோசித்து இதற்கான பணிகளை செயல்படுத்துவேன். ஈராக்கில்,
அமெரிக்க படைகள் தற்போது செயல்படுத்திவரும் விசாரணைமுறையை
மாற்ற நடவடிக்கை எடுப்பேன். அமெரிக்கா யாரையும் துன்புறுத்தாது
என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்து கொள்கிறேன்.
பொருளாதார நெருக்கடியால் கடும் சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை வகுப்பது தொடர்பாக அடுத்த இரண்டு
மாதங்களுக்கு இதுதான் எனது வேலை. குறிப்பாக, வீட்டு கடன்
வாங்கி அவதிப்படும் உரிமையாளர்கள் தொடர்ந்து வீடுகளில்
குடியிருக்க செய்யும் வகையில் வங்கிகள், கடன் வழங்கிய
நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்பதற்கு
வழிவகை செய்யப்படும். அது நான் பொறுப்பேற்ற பின் எடுக்கும்
நடவடிக்கையாகும். இவ்வாறு ஒபாமா கூறினார்.
|