தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு
அரசியல் தீர்வொன்றை காண அரசாங்கத்துக்கு அழுத்தம்
கொடுப்பதற்கு விடுதலைப்புலிகளை விட்டால் வேறு
எவருமில்லையென நேற்று திங்கட்கிழமை சபையில் சுட்டிக்காட்டிய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்
தலைவரான இரா. சம்பந்தன், இதன் காரணமாகவே புலிகளை
அழித்தொழித்துவிட அரசாங்கம் முயற்சிப்பதாகவும்
தெரிவித்தார்.
அத்துடன், வடக்கு கிழக்கில்
சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையுடன் சர்வஜன வாக்கெடுப்பொன்றை
நடத்தி அதன் மூலம் அங்குள்ள மக்கள் அளிக்கும் தீர்ப்பை
அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் அவர்
வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று
நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி,
பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட விடயங்களுக்கான
நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில்
பேசும்போதே சம்பந்தன் எம்.பி. மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
அவர் இங்கு மேலும்
பேசுகையில்;
ஆயுதக் குழுக்களுடன்
இணைந்து கொண்டு வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதாக
ஜனாதிபதி கூறுவது நகைப்புக்கிடமானது. தமிழ் மக்களின்
அபிலாஷைகள், அரசியல் ஜனநாயக உரிமைகள் போன்ற விடயங்கள்
பல தசாப்தங்களாக பல பிரச்சினைகளைக் கொண்டு மூடி
மறைக்கப்பட்டுள்ளது. இதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
புரிந்துகொள்ள வேண்டும்.
இரு தசாப்தங்களின் பின்னர்
வாக்களிக்கும் வாய்ப்பு கிடைத்த எமது மக்கள், எந்தத்
தயக்கமும் இன்றி தமிழரசுக் கட்சியை தெளிவாக தெரிவு
செய்தார்கள். எனினும், அரசாங்கம் அதை ஏற்றுக்கொள்ளத்
தயாராக இல்லை. வெட்கக் கேடானதொரு தேர்தலை கிழக்கில்
நடத்திவிட்டு, இந்த நிலையில் வெட்கமின்றி எம்மை (இலங்கை
தமிழரசுக் கட்சி) பற்றி பேசுகிறார்கள்.
தமிழ் மக்களை படையினரின்
பலத்தை பயன்படுத்தி அடிமைப்படுத்திவிடலாமென நினைக்காதீர்கள்.
தமிழ் மக்கள் நீங்கள் (அரசாங்கம்) கொடுக்கும் கச்சான்
கொட்டைகளில் திருப்தி அடைந்துவிட முடியாது. எமது
வரலாற்று உரிமைமிக்க நிலத்தில் நிர்வாக அதிகாரம்
எமக்குத் தேவை. எனவே, சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில்,
சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தி மக்களுக்கு
தேவையானதை அவர்களிடமே கேளுங்கள். அது தான் தற்போது
செய்ய வேண்டியது. அதை நாம் ஏற்றுக்கொள்வோம். கிழக்கில்
மக்கள், அவர்களது பிரதிநிதிகளை தெரிவு செய்து
வாழவே விரும்புகின்றனர்.
புதுடில்லி சென்றிருந்த
ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரான பசில் ராஜபக்ஷ,
தமிழ் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாதென
உறுதியளித்திருந்தார். ஆனால், இங்கோ வன்னியில் மக்களின்
இருப்பிடங்கள் மீதும், கிளிநொச்சி வைத்தியசாலை
மீதும் விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதுதான்
உறுதியளித்த போது ஏற்பட்ட நிலைமை.
இதேபோல், அரசாங்கத்தின்
கிழக்கு மீட்பு நடவடிக்கையின் போது, கொல்லப்பட்ட
127 பேர் பற்றிய விபரங்களை சமர்ப்பித்தும் உரிய
விசாரணைகள் நடத்தப்பட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில், இந்த இலங்கையில்
தமிழ், முஸ்லிம், சிங்களம் என இலங்கை வாழ் சகல இன
மக்களுக்கும் உரிமை இருப்பதாக ஜனாதிபதி இந்து பத்திரிகைக்கு
தெரிவித்திருக்கிறார். அது அவரது கொள்கையா என்பது
தெரியாது. கடந்த காலங்களில் அவரது நடவடிக்கைகளுடன்
ஒப்பிட்டுப் பார்க்கையில் அதன் உண்மை விளங்கும்.
இதேநேரம், இலங்கை என்பது
சிங்கள மக்களுக்குரிய நாடென்றும், தமிழ், முஸ்லிம்
மக்களுக்கு அவர்களுடன் இணைந்து வாழ முடிந்த
போதிலும் தேவையற்ற கோரிக்கைகளை முன்வைக்க
முடியாதென இராணுவத் தளபதி ஊடகமொன்றுக்கு தெரிவித்திருக்கிறார்.
இதேபோல் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரான ஓமல்பே
சோபித்த தேரரோ, இது சிங்கள மக்களின் நாடென கூறியுள்ளார்.
மறுபுறம் அக்கட்சியின் கொள்கை வகுப்பாளரான அமைச்சர்
சம்பிக்க ரணவக்கவோ விடுதலைப்புலிகள் வந்த பிறகே இந்த
பிரச்சினைகள் உருவெடுத்ததாகக் கூறுகிறார். அதாவது,
50,70 காலப்பகுதிகளில் தமிழ் மக்களின் உரிமைப்
பிரச்சினைகள் இருக்கவில்லை என்பது போல அவர் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் மக்களின் தாய்நாடு
இலங்கையல்ல இந்தியாவின் தமிழ் நாடே என்று கூறும்
ஹெல உறுமயவினர், இங்குள்ள தமிழர்களுக்கு பிரச்சினையென்று
ஒன்று வரும்போது, தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு
வர வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும்.
விஜயன் இலங்கைக்கு வரும்
முன்னரே, திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம், முன்னேஸ்வரம்,
நகுலேஸ்வரம் போன்ற சிவன் கோயில்கள் நாட்டின் பல
பாகங்களிலும் இருந்துள்ளன. இதுவே தமிழ் மக்களின்
வரலாறு. ஆனால், தமிழர்கள் வந்தேறு குடிகள் என்றும்,
முஸ்லிம்கள் வியாபாரத்திற்கு வந்தவர்கள் என்றும்
கூறுபவர்களே இன்று அரசாங்கத்திற்கு ஆலோசகர்களாக
இருக்கின்றனர்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு
அரசியல் தீர்வொன்றை காண அரசாங்கத்துக்கு அழுத்தம்
கொடுக்க விடுதலைப்புலிகள் இல்லாவிட்டால் இங்கு
வேறு யாரும் கிடையாது. அதனாலேயே புலிகளை அழித்துவிட
வேண்டுமென நிற்கிறார்கள். இந்தியா, அமெரிக்கா,
ஐரோப்பிய ஒன்றியம் என முழுச் சர்வதேசமுமே அரசியல்
தீர்வொன்றை காணுமாறே வலியுறுத்துகின்றன.
வன்னியில் விமானத் தாக்குதல்களையும்,
குண்டுத் தாக்குதல்களையும் நடத்தி உயிர்ச் சேதங்களையும்,
பொருட் சேதங்களையும் ஏற்படுத்தி வரும் அரசாங்கம்,
வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, கிழக்கில் ரி.எம்.வி.பி.
என துணை இராணுவ குழுக்களை அரவணைத்துக் கொண்டு
ஜனநாயகத்தை வழங்கிவிட்டதாக வெளி உலகுக்கு காட்டிக்
கொள்கிறது.
அமைச்சர் தினேஷ் குணவர்தன
எம்மை நோக்கி புலிகள் என்றார். நாம் புலிகளல்ல. எப்போதும்
புலிகளாகவும் மாட்டோம். இது தான் நீங்கள் எமது மக்களுக்கும்
கொடுக்கும் அங்கீகாரம். அன்று சந்திரிகா குமாரதுங்க
ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது முந்தானையை பிடித்துத்
திரிந்த நீங்கள் (தினேஷ் குணவர்தன) இன்று
ஜனாதிபதியின் சால்வையை பிடித்துக்கொண்டு திரிகிறீர்கள்.
நாம் எப்போதுமே எமது மக்களின்
பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதற்காகவே
செயற்பட்டுள்ளோம். அதைத்தான் இன்றும் செய்து
வருகிறோம். எதற்காகவும் எமது சுயநிர்ணய உரிமையை
ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. தமிழர்களின்
வரலாற்று உரிமை பூமியில் அம்மக்கள் சுயநிர்ணய
உரிமையுடன் வாழ வேண்டும் என்றார்.
இதேநேரம், சம்பந்தன் எம்.பி.
பேசும்போது, அமைச்சர்களான தினேஷ் குணவர்தனவும் டக்ளஸ்
தேவானந்தாவும் இடைக்கிடையே வாய்த் தர்க்கத்தில்
ஈடுபட்டதுடன், சம்பந்தனும் அதற்கு பதில் அளித்தார்.