இலங்கையில் தற்போதுள்ள சூழ்நிலையில்
யுத்தத்தை நிறுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லையென
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று
செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். இந்தியத்
தலைநகர் புதுடில்லிக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை
மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, நேற்று நிருபர்களுடனான
சந்திப்பின்போது, தற்போதுள்ள நிலையில் இலங்கையில்
போரை நிறுத்துவதற்கான வாய்ப்பு இல்லையென்று
கூறியுள்ளார்.
"இலங்கையின் நெருக்கடிக்கு
அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதே எமது விருப்பம்.
இது தொடர்பாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நாங்கள்
தெரிவித்துள்ளோம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை
மேற்கொள்ளவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய
வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்திக்க
நேரம் ஒதுக்கித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளேன்'
என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
கடந்த வாரம் புதுடில்லிக்குச் சென்று இந்தியத்
தலைவர்களை சந்தித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியின்
தலைவரான ரணில் விக்கிரமசிங்கவும் இந்திய அரச தலைவர்களுடன்
பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளார். பிம்ஸ்ரெக் உச்சி
மாநாட்டுக்காக புதுடில்லிக்குச் சென்ற தருணத்தில்
இந்தியத் தலைவர்களை ஜனாதிபதி ராஜபக்ஷ சந்தித்ததுடன்,
இலங்கையின் தற்போதைய நிலைவரம், வட பகுதி இராணுவ
நடவடிக்கை தொடர்பாக புதுடில்லிக்கு விபரித்திருந்தார்.
இலங்கையில் போர்நிறுத்தமொன்று
அமுலாக்கப்பட வேண்டுமென இந்திய அரசின் பங்காளிக்கட்சியும்
தமிழகத்தின் ஆளும் கட்சியுமான தி.மு.க. உட்பட பல்வேறு
கட்சிகள் இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்துவரும்
நிலையில், போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படாதென
ஜனாதிபதி ராஜபக்ஷ உறுதியாக அறிவித்திருந்தார்.
ஆயினும், தமிழ் நாட்டிலும்
புதுச்சேரியிலும் போர்நிறுத்தத்தை வலியுறுத்தி
தினமும் அரசியல் கட்சிகள், திரைப்படத்துறையினர்,
பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பல்வேறு
துறைகளைச்சார்ந்தவர்கள் உண்ணாவிரதம், மனிதச்சங்கிலி,
ஆர்ப்பாட்டம், பேரணியென சாத்வீக முறையில் போராட்டங்களை
முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடும்
அழுத்தத்தை எதிர்நோக்கியுள்ள இந்திய மத்திய அரசாங்கம்,
எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்
விக்கிரமசிங்கவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பதாகக்
கூறப்படுகிறது.