எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில்
இந்த நாட்டிலுள்ள 96 வீதமான வீடுகளுக்கு மின்சாரம்
வழங்கப்படுமெனத் தெரிவித்த மின்வலு அமைச்சர் ஜோன்
செனிவிரட்ன, யாழ். குடாநாட்டுக்கு அடுத்த மாதம்
முதல் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்படுமென்றும்
கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று
வியாழக்கிழமை இடம்பெற்ற மின்வலு அமைச்சுக்கான நிதி
ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு
தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; ஐ.தே.க.
ஆரம்பித்த நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டத்தைத்
தான் நாம் தற்போது நடைமுறைப்படுத்துகின்றோம்.
அவர்களால் செய்ய முடியாததை நாம் செய்யும்போது
குற்றஞ்சாட்டுகின்றனர்.
மின்சாரக் கட்டணப்
பட்டியல் அதிகரித்ததையடுத்து மக்களின்
மின்பாவனையும் குறைந்துள்ளது. மக்கள் மின்சாரத்தை
சிக்கனமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டத்திற்கு
திருகோணமலையிலிருந்து நிலக்கரி எடுத்துவரும்
திட்டத்தை கைவிட்டுள்ளோம்.
நுரைச்சோலை அனல்மின்
நிலையத் திட்டம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி
செய்யப்படுவதால் சுற்றுச் சூழலுக்கோ, மக்களுக்கோ
பாதிப்புகளை ஏற்படுத்தாது. இன்று எமது மக்களில் 83
வீதமானோர் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.
இந்தியாவிலோ, பாகிஸ்தானிலோ கூட இந்த வீதம் இல்லை.
நாட்டுக்கு இறக்குமதி
செய்யப்படும் பெற்றோலியத்தில் 40 சதவீதம் மின்சார
உற்பத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டியேற்பட்டதால்
பல சிக்கல்கள், விலையேற்றங்கள் ஏற்பட்டன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
ஆட்சிக்கு வரும்போது வட,கிழக்கு பிரச்சினை போன்றே
மின்வலுப் பிரச்சினையும் இருந்தது. ஆனால், இதனை
சவாலாக எடுத்து நாம் இன்று வெற்றிகண்டு வருகின்றோம்.
கடந்த 3 வருடகாலத்தில்
நாம் மக்களை இருட்டில் வைக்கவில்லை. களனிதிஸ்ஸ அனல்
மின் நிலையத்தின் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல்
நடத்திய போது கூட நாம் ஒரு மணித்தியாலம் கூட மக்களை
இருட்டில் வைத்திருக்கவில்லை. இந்தியாவில் கூட
இன்று தினமும் 6 மணிநேர மின்வெட்டு
அமுல்படுத்தப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு
ஏற்படக்கூடிய மின் வலுப்பிரச்சினையை சமாளிக்க
கரவலப்பிட்டியவில் அமைக்கப்படும் மின்நிலையம்
உதவியாகவிருக்கும். 250 மில்லியன் டொலர் செலவில்
இது அமைக்கப்படுகின்றது.
கரும்பு சக்கைகளை
பயன்படுத்தி மின் உற்பத்தி செய்தல், திண்மக்
கழிவுகள், சூரிய ஒளி, காற்று போன்றவற்றை
பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்யும்
கருத்திட்டங்களுக்கு நாம் அனுமதி வழங்கியுள்ளோம்.
அரை நூற்றாண்டு பழைமை
வாய்ந்த எமது மின்சார விநியோக முறையை தற்போதைய
காலத்துக்கேற்றவாறு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.
மின்சார விநியோகத்தை பொறுத்தவரை மின்சார
உபநிலையங்களை அமைப்பது அவசியம். அதற்கான
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு இந்த
நாட்டிலுள்ளோரில் 100 இற்கு 96 வீதமானோர்
மின்சாரத்தை பெறக்கூடிய நடவடிக்கை எடுப்பதே எமது
இலக்கு. நாம் அதனை நிச்சயம் வழங்குவோம்.
திருமலையில் எதிர்வரும்
இரு வருடங்களில் பாரிய இரு நிலக்கரி மின்
நிலையங்கள் உருவாக்கப்படும். யாழ்ப்பாணத்திலுள்ள
சுன்னாகத்தில் 30 மெகாவாட்ஸ் மின்நிலையமொன்று
எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம்
யாழ்குடாநாட்டுக்கு 24 மணிநேர மின்சாரம்
வழங்கப்படும்.