|
ஈரான் விமானம் தூள் தூள் : 168
பயணிகள் பரிதாப பலி
டெக்ரான் : ஈரான் நாட்டு
பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 168 பேர் பலியாயினர்.
ஈரான், டெக்ரானில் உள்ள இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்தில்
இருந்து, அந்நாட்டின் காஸ்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின்
பயணிகள் விமானம் ஒன்று, அர்மீனியா தலைநகர் யெரவானுக்கு நேற்று
புறப்பட்டது. இதில் 153 பயணிகளும், விமான சிப்பந்திகள் 15
பேரும் இருந்தனர். விமானம் புறப்பட்ட 16வது நிமிடத்திலேயே,
விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறையில் உள்ள
ரேடாரிலிருந்து மறைந்தது. அடுத்த சில நிமிடங்களில் விமானம்
விபத்துக்குள்ளானதாக தகவல் கிடைத்தது.
டெக்ரான்
அருகேயுள்ள காஸ்வின் என்ற இடத்தில் உள்ள பண்ணை பகுதியில்
மோதி, விமானம் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரான் நாட்டு, "டிவி'யில் விமானம் விபத்து தொடர்பான காட்சிகள்
ஒளிபரப்பப்பட்டன. அந்த பகுதி முழுவதும் ஒரே புகை மண்டலமாக
இருந்தது. விமானத்தின் இடிபாடுகள், அந்த பகுதியின் பல்வேறு
இடங்களில் சிதறிக் கிடந்தன. விமானம் மோதியதால், அங்கு
தரையில் 10 மீட்டர் ஆழத்துக்கு பள்ளமாகக் காணப்பட்டது.
விமானத்தில் இருந்த 168 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.
ஈரான் விமானப்
போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:
தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்க முயற்சிக்கும்
போது, எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம். இருந்தாலும்,
விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவில்லை. கறுப்புப் பெட்டியைக்
கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. ஈரான் தேசிய ஜூடோ
அணி வீரர்கள் எட்டு பேர் இதில் பயணம் செய்தனர்; அவர்களும்
பலியாகி விட்டனர் என்றனர்.
காஸ்வின்
போலீஸ் அதிகாரி மசூத் ஜபாரினாசாப் கூறியதாவது:
விமானம் முழுவதுமாக நாசமாகி விட்டது. அதில் பயணம் செய்தவர்களின்
உடல்களும் கருகிவிட்டன. பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டனர்
என்றார். விமானத்தில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர்
அர்மினியா மற்றும் ஜார்ஜியாவைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து ஈரான் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
|