சிறீலங்கா
படைகளுடன் இணைந்து இயங்கும்
ஆயுதக்குழுக்களில் ஒன்றான
ஈ.பி.டி.பி, யாழ்ப்பாணத்திலுள்ள
கட்டிட ஒப்பந்தகாரர்கள் மற்றும்
அரச குத்தகைகளை பெற்றுள்ள
தனியார் ஆகியோருக்கு தொடர்ந்தும்
உயிர் அச்சுறுத்தல் விடுத்து
வருவதாக, யாழ் கட்டிட ஒப்பந்தகாரர்
சங்கத்தின் பிரமுகர் ஒருவர்
யாழ் செய்தியாளருக்கு
தெரிவித்துள்ளார்.
முன்னர்
கட்டிட ஒப்பந்தங்களில் பெறப்படும்
இலாபங்களில் ஒரு பகுதியை கப்பமாக
தமக்கு தருமாறு கோரிவந்த இந்த
ஒட்டுக்குழுவினர், தற்போது அவ்
ஒப்பந்தங்களையே தமக்கு
தருமாறும், இல்லையெனில் தம்மையும்
முதலீடற்ற பங்காளியாக சேர்த்துக்கொள்ளுமாறும்
கோரிக்கை விடுப்பதாகவும்,
உரியவர்கள் மறுக்கும் பட்சத்தில்
கொலை அச்சுறுத்தல் விடுப்பதாகவும்
அவர்கள் தெரிவித்தனர்.
தொண்ணூறுகளின் பிற்பகுதியிலும்
ஈ.பி.டி.பியின் நடவடிக்கைகள்
இவ்வாறு காணப்பட்டது என்றும்,
பின்னர் விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தின்
பொதுமக்களின் வாசல்வரை வந்த
பின்னர் இங்கிருந்து தப்பி
வெளிநாடுகளில் தங்கிருந்த பலர்
தற்பொழுது மீண்டும் திரும்பி
வந்து தமக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல்
விடுப்பதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
முன்னைய
காலங்களில் அபிவிருத்திக்கு
என ஒதுக்கப்பட்ட பணத்தில்
பெரும் பகுதியை மக்களின்
அபிவிருத்திக்குக் கொடுக்காது
ஈ.பி.டி.பியின் உறுப்பினர்கள்
பங்கு போட்டுக் கொண்டதும்,
பின்னர் பங்குப்பிரிப்பில்
சிலர் முரண்பட்டு நாட்டைவிட்டு
வெளியேறியதும் அனைவரும் அறிந்ததே.