மன்னார் பேசாலைப்பகுதியில்
கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை துணைப்படை
ஆயுததாரிகள் சிலர் வீடொன்றினுள் புகுந்து
பெண்களுடன் தவறாக நடக்க முயற்சி
செய்துள்ளனர்.வீட்டுப் பெண்கள் துணிச்சலுடன்
அபயக்குரல் எழுப்பியதும், அயலவர் திரண்டு
வீட்டுக்குள் நுழைய ஆயுததாரிகள் அங்கிருந்து
தப்பியோடிவிட்டனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை
அதிகாலை 1.30 மணிக்கு பேசாலையிலுள்ள வீட்டில்
தாய், தந்தை மற்றும் இரு மகன்கள் இரண்டு
மகள்மார் உறக்கத்தில் இருந்தவேளை அங்கு
சென்ற ஆயுதம் தரித்த சிலர் வீட்டை
சோதனையிட வேண்டும் எனக்கூறி கதவைத் திறக்குமாறு
கோரியுள்ளனர்.
வீட்டார் கதவை
திறக்காததால் தொடர்ந்து ஆயுததாரிகள் மிரட்டவே
வீட்டில் உள்ளவர்கள் அபயக்குரல் எழுப்ப
அயலவர் திரண்டு வந்துள்ளனர்.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த
ஆயுததாரிகள் தமது ஆயுதங்களைக்காட்டி அயலவர்களை
மிரட்டி அனுப்பி விட்டனர். ஆயுததாரிகள்
மூவரில் இருவர் தமது முகத்தை அடையாளம் காண
முடியாதவாறு துணிகளால் கட்டியிருந்தனர்.
ஆயுததாரிகள்
தொடர்ந்தும் வீட்டுக்கதவை திறக்குமாறு
மிரட்டியவாறு இருந்த நிலையில், அதிகாலை
4:00 மணியளவில் வீட்டார் கதவை திறக்க
ஆயுததாரிகள் சடுதியாக வீட்டினுள் புகுந்து
தந்தை, மற்றும் மகன்மாரை துப்பாக்கி
முனையில் அறையொன்றினுள் வைத்து பூட்டி
ஒருவர் காவலுக்கு இருக்க மற்றயவர்கள் தாய்
மற்றும் இரண்டு மகளையும் வேறு ஒரு அறையில்
வைத்துப் பூட்டிய பின்னர் தவறான நடக்க
முயன்றுள்ளனர்.
இதையடுத்து வீட்டில்
உள்ளவர்கள் மீண்டும் அபயக்குரல் எழுப்பவே,
அயலவர்கள் தற்காப்பு ஆயுதங்களுடன் திரண்டு
குரல் எழுப்பி குறிப்பிட்ட வீட்டுக்குச்
சென்றதால், ஆயுததாரிகள் அச்சத்தில் வீட்டைவிட்டு
பின்கதவால் வெளியேறி தப்பியோடிள்ளனர்.
மன்னாரில் இச்செய்தி
பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன்,
பாதிக்கப்பட்ட குடும்பம் சிறீலங்கா
படையினருடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழு
மற்றும் படை புலனாய்வுத்துறையினரின் அச்சுறுத்தலுக்கு
உள்ளாகியுள்ளதாக பதிவின் மன்னார் செய்தியாளர்
தெரிவிக்கின்றார்.
அயலவர்களின்
விழிப்பும், துணிவும், ஒற்றுமையும் ஒரு
குடும்பத்தின் உயிரையும் மானத்தினையும்
காப்பாற்றியுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ள
குடும்பத்தினர் கண்ணீருடன் கூறியதாக எமது செய்தியாளர்
மேலும் தெரிவித்தார்.
சிறீலங்காவில்
உள்ள தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகங்களும்
அதன் செய்தியாளர்களும் படையினரது அச்சுறுத்தல்
காரணமாக இவ்வாறான செய்திகளை வெளியிடுவதைத்
தவிர்த்து வருவதால், குற்றச் செயல்கள் பற்றிய
தகவல்கள் வெளிவராது தடுக்கப்படுகின்றன.
கடந்த 2006ஆம்
ஆண்டும் மன்னார் பேசாலையில் இளம்
தாயொருவர் சிறீலங்கா கடற் படையினரால்
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு
படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், எதிர்த்துப்
போராடிய அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளையும்
உளியால் குத்தி தூக்கலிட்டு படுகொலை செய்திருந்தமை
நினைவூட்டத்தக்கது.