-
தேர்தலில்
யாருடன் அணி என்பதை அறிவிக்க இன்னும் 3 நாள் : சூறாவளி
பிரசாரத்தில் விஜயகாந்த் தகவல்
-
காஞ்சிபுரம் :
"நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டளியுங்கள். வரும்
26ம் தேதி தெளிவான முடிவை அறிவிக்கிறேன்' என, காஞ்சிபுரத்தில்
தேர்தல் பிரசாரத்தை துவக்கிய தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் தெரிவித்தார். தமிழக அரசியலில் யார் யாருடன்
கூட்டணி, எந்தக் கட்சி அணிமாறப் போகிறது என்ற பரபரப்பு
கடந்த சில நாட்களாக அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இதில், தி.மு.க., - காங்கிரஸ் அணியில், தே.மு.தி.க.,
சேரும் பேச்சு நடப்பதாகக் கூறப்பட்ட நேரத்தில், அக்கட்சியின்
தலைவர் விஜயகாந்த், தேர்தல் சூறாவளிப் பிரசாரத்தை காஞ்சிபுரத்தில்
நேற்று துவக்கினார்.
-

அப்போது அவர் பேசியதாவது: முதன் முறையாக லோக்சபாத் தேர்தலை
தே.மு.தி.க., சந்திக்கிறது. நான் காஞ்சிபுரத்தில் தேர்தல்
பிரசாரத்தை துவக்கியுள்ளேன். இதற்கு காரணம் தெரியுமா?
(மக்கள் வெற்றி எனக் கூச்சலிட்டனர்.) நீங்கள் வெற்றி
எனக் கூறுவது நல்ல சகுனம். அரசியலில் மிகவும் பிரபலமான
அண்ணா பிறந்த மண் காஞ்சிபுரம். எனவே, இங்கு தேர்தல்
பிரசாரத்தை துவக்குகிறேன். இந்தியாவில், தமிழகம்
எதிலும் முன்னேறவில்லை. அனைத்திலும் பின் தங்கியுள்ளது.
மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இளைஞர்களுக்கு வேலை
வாய்ப்பு இல்லை. இதற்கு யார் காரணம், நீங்கள் தான்.
மாறி மாறி ஓட்டுப் போட்டீர்கள். கவர்ச்சி திட்டங்களுக்கு
ஓட்டுப் போடுகிறீர்கள். "டிவி' தருகிறேன் என்றால் ஓட்டுப்
போடுகிறீர்கள். உங்களை விலை கொடுத்து வாங்கலாம் என
நினைக்கின்றனர்.
இந்திய அரசு, 1974ம் ஆண்டு கச்சத்தீவை தாரை வார்த்தது.
அங்கு மீனவர்கள் மீன் வலையை காய வைப்பர். மாதா கோவிலில்
சாமி கும்பிடுவர். அதைத் தாரை வார்த்ததால் மீனவர்கள்
பாதிக்கப்படுகின்றனர். வற்றாத நதி காவிரி. கர்நாடகாவில்
ஓட்டு வேண்டும் என்று நம்மை வஞ்சிக்கின்றனர். இவற்றை
தட்டிக்கேட்க நீங்கள் நல்ல ஆட்சியாளர்களை உருவாக்க வேண்டும்.
நீங்கள் தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., என மாறி
மாறி ஓட்டளித்தீர்கள். அவர்கள் மத்தியில் கூட்டணி வைத்து
கோடி கோடியாக சம்பாதித்தனர். தேர்தல் அறிக்கை இல்லை:
வரும் தேர்தலில் நான் தேர்தல் அறிக்கை தரப் போவதில்லை.
நான் மக்களுக்காக நிறைய திட்டங்கள் வைத்துள்ளேன். நான்
உங்களை நம்புகிறேன்; நீங்கள் எங்களை நம்புங்கள். காசை
வாங்கி ஓட்டுப் போடாதீர்கள். அப்பா, அம்மா, அக்கா, தங்கை
யாரும் காசு வாங்க விடாதீர்கள். மவுனம் கலையுமா? எல்லாரும்
என்ன நினைக்கின்றனர்... விஜயகாந்த் மவுனமாக இருக்கிறார்;
கூட்டணியை நம்புகிறார். இன்று மவுனத்தை கலைத்து
விடுவார், நாளைக்கு கலைத்து விடுவார் என்கின்றனர். நான்
என் வேலை உண்டு என உள்ளேன்.
அன்றிலிருந்து கூறுகிறேன்... தெய்வத்தோடும், மக்களோடு
மட்டும் கூட்டணி. இப்ப கேட்கிறேன்... யாருடன் கூட்டணி
வைக்கலாம்? தைரியமாக கை தூக்குங்கள். யாருடனாவது கூட்டணி
வேண்டும் என்றால் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டளிக்க
வேண்டும். இதில் பல அர்த்தம் உள்ளது. அவர்கள் கோடிக்கணக்கான
ஓட்டுகளை நம்பவில்லை; கோடிக்கணக்கான பணத்தை நம்பி உங்களை
விலைக்கு வாங்கலாம் என நினைக்கின்றனர். விலை போகப்
போகிறீர்களா? நான் எங்கும் போகவில்லை. தி.மு.க., கூட்டணிக்கு
போகணுமா? அ.தி.மு.க.,விற்கு போகணுமா? வேண்டாம் என்றால்
நான் சொல்பவர்களுக்கு ஓட்டுப் போடுவீர்கள் அல்லவா? நான்
அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டுப் போடணும். என் மக்களை
நல்லபடியாக வாழ வைக்காமல் போக மாட்டேன். காசுக்கு ஆசைப்பட்டிருந்தால்
இப்படி வந்திருக்க மாட்டேன். என்றோ சூட்கேஸ் வாங்கிக்
கொண்டு சென்றிருப்பேன். தொண்டர்கள் காசுக்கு அடிபணியக்
கூடாது. பிற கட்சியிடம் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப்
போடாமல் இருந்து விடாதீர்கள்; நாடு முன்னேறாது. உங்களுக்கு
பின்னால் வரும் சந்ததியை நினைத்துப் பாருங்கள். நல்ல
ஆட்சியை தேர்ந்தெடுங்கள். நீங்கள் ஆதரிக்காவிட்டால்
நானும் கூட்டணி வைக்க வேண்டி வரும். கூட்டணி வைத்துக்
கொள்ளவா? (வேண்டாம் என மக்கள் கூச்சல்.)
தேர்தலில் ஓட்டுப் போட்டு எங்களை 40 இடங்களிலும் ஜெயிக்க
வையுங்கள். அதன்பின் நான் எதுவும் செய்யாவிட்டால் எனது
சட்டையைப் பிடித்துக் கேளுங்கள். முதலில் என் கட்சி
லோக்சபாவில் நுழையட்டும். நான் மவுனம் கலையப் போகிறேன்.
முடிவை அறிவிக்கப் போகிறேன். குழப்புகிறேன் என பத்திரிகையாளர்கள்
கூறுகின்றனர். ஆனால், நான் தெளிவாக இருக்கிறேன். பத்திரிகையாளர்களும்,
பிற அரசியல் கட்சியினரும் தான் குழப்பத்தில் உள்ளனர்.
தே.மு.தி.க., வேட்பாளர்கள் நேர்காணல் 23ம் தேதியிலிருந்து
25ம் தேதி வரை நடக்க உள்ளது. அதன்பின் 26ம் தேதி கன்னியாகுமரியிலிருந்து
தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறேன். மீண்டும் காஞ்சிபுரம்
வருவேன். அதற்கு முன் சில பிரச்னைகளை சந்தித்துவிட்டு
வருகிறேன். என்ன குழப்பமாக உள்ளதா... நீங்களும் குழப்பத்திலே
இருங்கள். 26ம் தேதியிலிருந்து எனது பேச்சை கேளுங்கள்.
தெளிவு ஏற்படும். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
மேடையில் கிடையாது : வேனில் பிரசாரம்: * தமிழகத்தில்
முதல் அரசியல் தலைவராக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்,
காஞ்சிபுரத்தில் நேற்று தேர்தல் பிரசாரத்தை துவக்கினார்.
* கூட்டணி முடிவை அறிவிப்பார் என்று அனைத்து பத்திரிகையாளர்களும்
காஞ்சிபுரத்தில் குவிந்தனர்.
* பேசிய இடங்களில் மக்களிடம் தி.மு.க., - அ.தி.மு.க.,
- காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவா எனக் கேட்டார்.
மக்கள் வேண்டாம் என்றனர்.
* வழக்கமாக அரசியல் கூட்டங்களுக்கு ஆட்கள் அழைத்து வரப்படுவது
போல் யாரும் அழைத்து வரப்படவில்லை.
* மக்களின் மனநிலையை அறிய வந்ததுபோல் விஜயகாந்த் மக்களிடம்
கேள்விகளை கேட்டு பதில்களை பெற்றார்.
* அனைத்து இடங்களிலும் வேனில் நின்றபடியே பேசினார்;
மேடை எதுவும் அமைக்கப்படவில்லை.
|